4/5/08

கண்ணீருக்குள் மூழ்கிய ஒரு தமிழன் வாழ்வு கவிதையாகி....



வெண்ணிலவு விழி மூட
விடியல் வரும் வேளையிலே...
விழி
கசக்கி எழுந்து நின்றேன்,
அதிகாலை ஆறு மணி...

ஆலம் விழுது அறுத்து,
அவசரமாய்
பல் தேய்த்து...
வேலைக்கு போவதற்கு கால்கள்
விறுவிறுக்கும்
வேளையிது...

காலை உணவுக்காய் காளை
இவன்
அடுக்கணையில்...
பாணையிலே
பழங்கஞ்சி தேடி...
அகப்பை
அடி தட்டி வரும்.
அடியினில்
சோறு இன்றி வெறும்
அகப்பை
தான் மிச்சம் வரும்...!

வடித்தெடுத்த
பழங்கஞ்சி
வாய்க்கு
இதமாய் ருசி தரும்.
என் நிலை கண்ட என்னவள்
இமைக்குள்
நீர் கசிந்து வரும்...!

என் நெஞ்சு சுமந்த வேதனையால்

இதயம் இடிந்து சுமையாகும்...

அன்பாய் ஆறுதல் சொல்லி சட்டை பையில்

இருந்த சில்லறையை அவள் கரம் சேர்த்து,

ஆதவன் வருகைக்கு முன் அவசரமாய்

மிதிவண்டி விரையும் விறகு வெட்ட காட்டுக்கு..


கல்லு,மேடு,பள்ளம், எல்லாம்

கண்டிடாமல் என் வண்டி ஓடும்...

கால்கள் கடுகடுக்கும்.

சில்லுக்கும் காற்று கழியும்...

இருந்தும் காற்று நிரப்பி இடைவிடாமல்

மீண்டும் வண்டி விரையும்....!


ஊர் விட்டு ஊர் தாண்டி

ஊர் தொலைவில் காடு இருக்கும்.

காடு கண்ட கண்களுக்கு

வறுமை பறந்தாய் ஒரு நினைவு...!


பச்சையாய் காடு படுத்திருக்கும்

பாலை,வீரை,சூரை, எல்லாம் பழுத்திருக்கும்.

பாம்புகள் என்னை படமெடுக்கும்...

நான் பணம் தேடி வந்தது பெருங்காடு...!

கத்தி கோடரி கையில் எடுத்து
பட்ட மரங்கள் தேடி பகலெல்லாம்
கண்கள் காடு தடவும்....!

கண்களில் தெரியும் மரமெல்லாம்
காசாய் தான் மனம் உணரும்...
கோடரி மரத்தை துண்டு போடும்.
அளந்து அளவாய் துண்டாக்கும்.
துண்டுகள் வண்டியில் பொதியாகும்...
ஊண் பசி போக்க உதிரம் இங்கே
வியர்வை ஆகும்....!

பசியும் என்னை மறந்து போகும்.
தாகத்தால் நாக்கு தவிதவிக்கும்.
கொண்டு வந்த தண்ணீரும் தீர்ந்து போகும்.‍
குளத்து தண்ணீரில் நாக்கு நனைய‌
சொர்க்கம் தெரியும்....!

தாகம் தீர தனையன்,தாரம் நினைவு வர‌
தெருவில் மெதுவாய் விறகு வண்டி நகரும்...
காலினில் செருப்பும்மில்லை.
காட்டொர தெருவில் கண்ணில்
படுவார் யாருமில்லை...
தொலை தூர ஊர் நோக்கி
விறகுடன் வண்டி உருளும்...!

உச்சி சூரியன் என்னைச் சுட்டு பார்க்கும்.
உள் நாக்கு என்னைச் சுற‌ண்டிப் பார்க்கும்.
இருந்தும் ஊர்ந்து ஊர்ந்து
ஊர் வரை வண்டி நகரும்...

விறகு விற்க்கவென்று வீடு வீடாய்
விலை கூவி வேளை மறந்து வேள்வி நடக்கும்.
கூவி அழைக்கும் என்குரலும் அடங்கிவிடும்.
தொண்டை வறண்டு குடல் என்னைச் சுறண்டும்.

விறகு வாங்க வந்தொருவன் விலை கேட்பான்.
அருகிருந்தவன் விறகு பச்சை என்பான்.
இன்னொருவன் பாதி விலை பறைவான்.
வேறுவழியின்றி என் விலை வேண்டாம்..
குடும்ப வலி போதும் என்றெண்ணி...
விறகு இங்கே.... பணமாகும்..!

பணத்தை கண்டதும் கைகள் என்னை...
பறக்கச் சொல்லும்.
பசியால் துடிக்கும் பாலன் பசி தீரக்க உணவு தேடி..
மாலை மயங்கும் வேளையிலே என்
மாது வாடியிருந்த மனை முன்...
என் வண்டி காலாறும்...

பசி பொறுக்கா என்னவன்
பாலுக்காய் அழுகிறான்...
பசி போக்கப் பாலின்றி பாவிமகள்
என்னை பார்க்கிறாள்...
வறுமையின் வலிகள் இவள்
விழிகளின் வழியே கண்ணீராய் வடியும்...

பிறப்பின் பலன் என் வாழ்க்கை
துட்டன் கையில்...
துன்பங்களும் என்னை வெறுக்கவில்லை.
தூண்டிலிலே நான் புழுவாக...
வாழ்வு என்றோ விடியும் என்று
வறுமை போக்க உந்துகிறேன்....












No comments: